Home » Tamil » யோபு அதிகாரம் – 39 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 39 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

1வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?

மான்குட்டியை ஈனுதலைப்

பார்த்தது உண்டா?

2எண்ணமுடியுமா

அவை சினையாயிருக்கும் மாதத்தை?

கணிக்க முடியுமா

அவை ஈனுகின்ற காலத்தை?,

3குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;

வேதனையில் அவற்றை வெளியேற்றும்.

4வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து

வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;

அவைகளிடம் மீண்டும் வராது.

5காட்டுக் கழுதையைக்

கட்டற்று திரியச் செய்தவர் யார்?

கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

6பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;

உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.

7நகர அமளியை அது நகைக்கும்;

ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.

8குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;

பசுமை அனைத்தையும் நாடி அலையும்.

9காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?

உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?

10காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி

உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க

அது உன் பின்னே வருமோ?

11அது மிகுந்த வலிமை கொண்டதால்

அதனை நம்பியிருப்பாயோ?

எனவே, உன் வேலையை

அதனிடம் விடுவாயோ?

12அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?

உன் களத்திலிருந்து

தானியத்தைக் கொணருமோ?

13தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;

ஆனால், அதன் இறக்கையிலும்

சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?

14ஏனெனில், மண்மேலே

அது தன் முட்டையை இடும்;

புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.

15காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ

காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ

அது நினைக்கவில்லை.

16தன்னுடையவை அல்லாதன போன்று

தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;

தன் வேதனை வீணாயிற்று

என்று கூடப் பதறாமல்போம்.

17கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;

அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.

18விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,

பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!

19குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?

அதன் கழுத்தைப் பிடரியால்

உடுத்தியது நீயோ?

20அதனைத் தத்துக்கிளிபோல்

தாவச் செய்வது நீயோ?

அதன் செருக்குமிகு கனைப்பு

நடுங்க வைத்திடுமே?

21அது மண்ணைப் பறிக்கும்;

தன் வலிமையில் மகிழும்

போர்க்களத்தைச் சந்திக்கப்

புறப்பட்டுச் செல்லும்.

22அது அச்சத்தை எள்ளி நகையாடும்;

அசையாது;

வாள் முனைக்கண்டு பின்வாங்காது.

23அதன்மேல்

அம்பறாத் தூணி கலகலக்கும்;

ஈட்டியும் வேலும் பளபளக்கும்;

24அது துள்ளும்; பொங்கி எழும்;

மண்ணை விழுங்கும்;

ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;

25எக்காளம் முழங்கும்போதெல்லாம்

“ஐஇ” என்னும்; தளபதிகளின்

இடி முழக்கத்தையும் இரைச்சலையும்

அப்பால் போரினையும்

இப்பாலே மோப்பம் பிடிக்கும்.

26உன் அறிவினாலா வல்லூறு

பாய்ந்து இறங்குகின்றது?

தெற்கு நோக்கி

இறக்கையை விரிக்கின்றது?

27உனது கட்டளையாலா

கழுகு பறந்து ஏறுகின்றது?

உயர்ந்த இடத்தில்

தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?

28பாறை உச்சியில்

கூடுகட்டித் தங்குகின்றது;

செங்குத்துப் பாறையை

அரணாகக் கொண்டுள்ளது.

29அங்கிருந்தே அது கூர்ந்து

இரையைப் பார்க்கும்;

தொலையிலிருந்தே அதன் கண்கள்

அதைக் காணும்.

30குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;

எங்கே பிணமுண்டோ

அங்கே அது இருக்கும்.


39:30 மத் 24:28; லூக் 17;37.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.