HomeTamil1 அரசர்கள் அதிகாரம் - 14 - திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எரொபவாமின் மகன் சாதல்

1அக்காலத்தில் எரொபவாமின் மகன் அபியா நோயுற்றான்.

2அப்போது எரொபவாம் தன் மனைவியைப் பார்த்து, “நீ எரொபவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு சீலோவுக்குப் போ. நான் இம்மக்களுக்கு அரசனாவேன் என்று சொன்ன இறைவாக்கினர் அகியா அங்கேதான் குடியிருக்கிறார்.

3பத்து அப்பங்களையும் தின்பண்டங்களையும் ஒரு கலயம் தேனையும் எடுத்துக் கொண்டு அவரிடம் போ. பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்று அவர் உனக்கு அறிவிப்பார்” என்றான்.

4எரொபவாமின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் சீலோவுக்குப் புறப்பட்டுப் போய் அகியாவின் வீட்டை அடைந்தாள். அகியா முதியவராய் இருந்ததால், கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார்.

5ஆண்டவர் அகியாவிடம், “இதோ! எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்க வருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார்.

6அவ்வாறே, அவள் வாயிலில் நுழைந்தவுடன், அவளது காலடி ஓசை கேட்ட அகியா கூறியது: “எரொபாவாமின் மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமான செய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.

7நீ எரொபவாமிடம் போய், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன்.

8தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும், என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை.

9அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்த எல்லாரையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய் வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிக் தள்ளினாய்; எனக்குச் சின மூட்டினாய்; ஆகையால், எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும்.

10இஸ்ரயேலில் அடிமையாகவோ, குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல், எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன்.

11எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்; வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ.

12நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான்.

13அவனுக்காக இஸ்ரயேலர் அனைவரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர். எரொபவாமின் வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு உகந்தவனாய் இருந்ததால், அவன் மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.

14ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான்.

15ஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டிப்பார்; தண்ணீரில் நாணல் போல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்; அவர்களுடைய மூதாதையருக்குத் தாம் வழங்கியிருந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ரயேலரை வேரோடு பிடுங்குவார்; அவர்களை யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார்; ஏனெனில், அவர்கள் அசேராக் கம்பங்கள் செய்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.

16எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார்.”

17பிறகு, எரொபவாமின் மனைவி புறப்பட்டுத் தீர்சாவுக்கு வந்தாள். அவள் தன் வீட்டு வாயிலில் கால் வைத்தவுடன் பிள்ளை இறந்து போனான்.

18இறைவாக்கினரான அகியா என்ற தம் அடியார் மூலம் ஆண்டவர் சொல்லியிருந்த வாக்கின்படியே, அப்பிள்ளையை அடக்கம் செய்து இஸ்ரயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடினர்.

எரொபவாமின் சாவு

19எரொபவாமின் பிற செயல்கள், அவன் செய்த போர், அவனது ஆட்சியைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

20எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான்.

யூதா அரசன் ரெகபெயாம்
(2 குறி 11:5-12:5)

21இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய்.

22யூதா நாட்டு மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். அவர்கள் தம் மூதாதையர் செய்த எல்லாவற்றையும் விட, மிகுதியான பாவம் செய்து அவருக்குப் பொறாத சினத்தைக் கிளப்பினர்.

23அவர்கள் தொழுகைமேடுகள் எழுப்பி, ஒவ்வோர் உயர் குன்றிலும், பசுமரத்தின் அடியிலும், கல்தூண்களையும் அசேராக் கம்பங்களையும் நிறுத்தினர்.

24நாட்டில் விலைஆடவர் இருந்தனர். இஸ்ரயேல் மக்கள்முன் இராதபடி ஆண்டவர் விரட்டியத்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்கள் அனைத்தையும் அவர்கள் செய்தார்கள்.

25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.

26ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.

27அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான்.

28அரசன் ஆண்டவரது இல்லத்திற்குள் நுழையும் போதெல்லாம் அரண்மனைக் காவலர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திரும்பி வந்து அவற்றைக் காவலறையில் வைப்பார்கள்.

29ரெகபெயாமின் பிற செய்திகளும் அவன் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

30ரெகபெயாமுக்கும் எரொபவாமுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர்நடந்து வந்தது.

31ரெகபெயாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, அவர்களோடு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியா நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். அவனுக்குப் பின் அவனுடைய மகன் அபியாம் அரசன் ஆனான்.


14:10 1 அர 15:29.
14:23 2 அர 17:9-10.
14:24 இச 23:17.
14:26 1 அர 10:16-17; 2 குறி 9:15-16.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://www.getcooltricks.com/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.