Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 46 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 46 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

நம்மோடு வாழும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் பாடல்; ‘இளமகளிர்’ என்ற மெட்டு)

1கடவுள் நமக்கு அடைக்கலமும்

ஆற்றலுமாய் உள்ளார்;

இடுக்கணுற்ற வேளைகளில்

நமக்கு உற்ற துணையும் அவரே.

2ஆகையால், நிலவுலகம்

நிலைகுலைந்தாலும்,

மலைகள் ஆழ்கடலில்

அதிர்ந்து நடுங்கினாலும்,

3கடலின் அலைகள் கொந்தளித்துப்

பொங்கினாலும், அவற்றின் பெருக்கால்

குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்

எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)

4ஆறு ஒன்று உண்டு,

அதன் கால்வாய்கள்

உன்னதரான கடவுளின்

திரு உறைவிடமான நகருக்குப்

பேரின்பம் அளிக்கின்றன.

5அந்நகரின் நடுவில்

கடவுள் இருக்கின்றார்;

அது ஒருபோதும் நிலைகுலையாது;

வைகறைதோறும் கடவுள் துணை

அதற்கு உண்டு.

6வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;

அரசுகள் ஆட்டம் கண்டன;

கடவுளின் குரல் முழங்கிற்று;

பூவுலகம் கரைந்தது.

7படைகளின் ஆண்டவர்

நம்மோடு இருக்கின்றார்;

யாக்கோபின் கடவுளே

நமக்கு அரண். (சேலா)

8வாரீர்! ஆண்டவரின்

செயல்களைக் காணீர்!

அவர் உலகில் ஆற்றியுள்ள

திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!

9உலகின் கடையெல்லைவரை

போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;

வில்லை ஒடிக்கின்றார்;

ஈட்டியை முறிக்கின்றார்.

தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.

10அமைதி கொண்டு, நானே கடவுள் என

உணர்ந்து கொள்ளுங்கள்;

வேற்றினத்தாரிடையே நான்

உயர்ந்திருப்பேன்; பூவுலகில்

நானே மாட்சியுடன் விளங்குவேன்.

11படைகளின் ஆண்டவர்

நம்மோடு இருக்கின்றார்;

யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more