Home » Tamil » யோபு அதிகாரம் – 37 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 37 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

1இதைக்கண்டு நடுங்குகிறது

என் இதயம்;

தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.

2அவரது குரலின் இடியோசையையும்

அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்

கவனமுடன் கேளுங்கள்.

3விசும்பின்கீழ் மின்னலை

மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின்

எல்லைவரை செல்ல வைக்கின்றார்.

4அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;

பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;

மின்னலை நிறுத்தார்

அவர்தம் குரல் ஒலிக்கையிலே.

5கடவுள் வியத்தகு முறையில்

தம் குரலால் முழங்குகின்றார்;

நம் அறிவுக்கு எட்டாத

பெரியனவற்றைச் செய்கின்றார்.

6ஏனெனில், உறைபனியை

‘மண்மிசை விழு” என்பார்;

மாரியையும் பெருமழையையும்

‘உரத்துப் பெய்க” என்பார்.

7எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,

எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.

8பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;

தம் குகைக்குள் அது தங்கும்.

9அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்

வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.

10கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;

பரந்த நீர்நிலை உறைந்து போகும்.

11அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;

கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.

12மேகம் அவரது ஆணைப்படியே

சுழன்று ஆடும்;

அவர் ஆணையிடுவதை எல்லாம்

மண்மிசை செய்யும்.

13கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ

இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.

14யோபே! செவிகொடும்;

இறைவனின் வியத்தகு செயல்களை

நின்று நிதானித்துக் கவனியும்.

15கடவுள் எவ்வாறு அவற்றை

ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,

அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்

தெறிக்கின்றன என்றோ அறிவீரா?

16முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என

உமக்குத் தெரியுமா?

அவை நிறை அறிவுள்ளவரின்

வியத்தகு செயல்கள் அல்லவா!

17தென்திசைக் காற்றினால்

நிலம் இறுக்கப்படுகையில்

உம் உடையின் வெப்பத்தால்

நீவிர் புழுங்குகின்றீர்.

18வார்ப்படக் கண்ணாடியை ஒத்த

திண்ணிய விசும்பை

அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?

19நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும்

என்று கற்பியும்; இருளின் முகத்தே

வகைதெரியாது உழல்கின்றோம்.

20‘நான் பேசுவேன்” என்று

எவர் அவரிடம் சொல்வார்?

அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?

21காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்

வானில் கதிரவன் ஒளிரும்போது,

மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!

22பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;

அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.

23எல்லாம் வல்லவரை

நாம் கண்டுபிடிக்க முடியாது;

ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே!

நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.

24ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;

எல்லாம் தெரியும் என்போரை

அவர் திரும்பியும் பாரார்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.