Home » Tamil » சீராக்கின் ஞானம் அதிகாரம் – 50 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 50 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

தலைமைக் குரு சீமோன்

1ஓனியாவின் மகன் சீமோன்

தலைமைக் குருவாய்த்

திகழ்ந்தார்; அவர் தம் வாழ்நாளில்

ஆண்டவருடைய இல்லத்தைப்

பழுதுபார்த்தார்; தமது காலத்தில்

கோவிலை வலிமைப்படுத்தினார்.

2அவர் உயரமான இரட்டைச்

சுவருக்கு அடிக்கல் நாட்டினார்;

கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர்

அணைகளை அமைத்தார்.

3அவருடைய காலத்தில் நீர்த் துறை

ஒன்று தோண்டப்பட்டது.

அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று

பரந்தது.

4தம் மக்களை அழிவினின்று

காப்பாற்றக் கருத்தாயிருந்தார்;

முற்றுகையை எதிர்த்து நிற்க

நகரத்தை வலிமைப்படுத்தினார்.

5திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து

அவர் வெளியே வந்த

வேளையில் மக்கள் அவரைச்

சூழ்ந்து நின்றபோது

எத்துணை மாட்சிமிக்கவராய்த்

திகழ்ந்தார்!

6முகில்களின் நடுவே

தோன்றும் விடிவெள்ளி

போன்று விளங்கினார்;

விழாக் காலத்தில் தெரியும்

முழு நிலவுபோல் ஒளி வீசினார்.

7உன்னத இறைவனின்

கோவிலுக்குமேல் ஒளிரும்

கதிரவன் போலவும் மாட்சிமிகு

முகில்களில் பளிச்சிடும்

வானவில் போலவும் காணப்பட்டார்.

8முதற்கனிகளின் காலத்தில்

மலரும் ரோசாபோன்றும்,

நீரூற்றின் ஓரத்தில் அலரும்

லீலி மலர்போன்றும் கோடைக்

காலத்தில் தோன்றும்

லெபனோனின் பசுந்தளிர்

போன்றும் திகழ்ந்தார்.

9தூபக் கிண்ணத்தில்

இருக்கும் தீயும் சாம்பிராணியும்

போலவும் எல்லாவகை

விலையுயர்ந்த கற்களாலும்

அணி செய்த பொற்கலத்தைப்

போலவும் விளங்கினார்.

10கனி செறிந்த ஒலிவ மரம்போலவும்

முகிலை முட்டும் சைப்பிரசுமரம்

போலவும் இருந்தார்.

11அவர் மாட்சியின் ஆடை

அணிந்து பெருமைக்குரிய

அணிகலன்கள் புனைந்து தூய

பலிபீடத்தில் ஏறியபோது

திருஇடம் முழுவதையும்

மாட்சிப்படுத்தினார்.

12எரிபலி பீடத்தின் அருகே

அவர் நிற்க, மற்றக் குருக்கள்

மாலைபோல் அவரைச் சூழ்ந்து

கொள்ள, அவர் அவர்களின்

கைகளிலிருந்து பலியின்

பாகத்தைப் பெற்றுக்

கொண்டபோது, லெபனோனின்

இளங் கேதுரு மரம்போல

விளங்கினார். அவர்கள்

பேரீச்சைமரம்போல் அவரைச்

சூழ்ந்துகொண்டார்கள்.

13ஆரோனின் மைந்தர்கள்

எல்லாரும் தங்களது

மாட்சியில் ஆண்டவருக்குரிய

காணிக்கைகளைத் தங்கள்

கைகளில் ஏந்தி இஸ்ரயேலின்

சபை முழுவதற்கும் முன்பாக

நின்றார்கள்.

14சீமோன் பலிபீடப் பணிகளை

முடித்துக்கொண்டு,

எல்லாம் வல்ல உன்னத

இறைவனுக்குச் செலுத்தவேண்டிய

காணிக்கையை ஒழுங்குபடுத்தினார்.

15பின் தமது கையை நீட்டிக்

கிண்ணத்தை எடுத்தார்;

திராட்சை இரசத்தை

அதில் வார்த்தார்;

பீடத்தின் அடியில் அதை

ஊற்றினார். அது அனைத்திற்கும்

மன்னரான உன்னதருக்கு

உகந்த நறுமணப் பலியாய்

அமைந்தது.

16அதன்பின் ஆரோனின்

மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்;

வெள்ளியாலான எக்காளங்களை

முழங்கினார்கள்; உன்னத

இறைவனை நினைவுபடுத்தப்

பேரொலி எழச் செய்தார்கள்.

17எல்லா மக்களும் ஒன்று

சேர்ந்து விரைந்தார்கள்;

தரையில் குப்புற விழுந்தார்கள்;

எல்லாம் வல்ல உன்னத

ஆண்டவரை வணங்கினார்கள்.

18பாடகர்கள் தங்கள் குரல்களால்

அவரைப் புகழ்ந்தார்கள்;

அதன் பேரொலி

இன்னிசையாய் எதிரொலித்தது.

19ஆண்டவருக்குரிய

வழிபாட்டுமுறை முடியும்வரை

இரக்கமுள்ளவர் திருமுன்

மக்கள் வேண்டினார்கள்;

உன்னத ஆண்டவரை

மன்றாடினார்கள்.

அதனோடு அவருடைய

திருப்பணி நிறைவு பெற்றது.

20ஆண்டவருடைய பெயரில்

பெருமை கொள்ளவும்

அவருடைய ஆசியைத்

தம் வாயால் மொழியவும்

சீமோன் இறங்கி வந்து

இஸ்ரயேல் மக்களின்

முழுச் சபைமீதும் தம்

கைகளை உயர்த்தினார்.

21உன்னத கடவுளிடமிருந்து

ஆசி பெற்றுக்கொள்ள

அவர்கள் மீண்டும் தலை

தாழ்த்தி வணங்கினார்கள்.

அறிவுரையும் ஆசியும்

22இப்பொழுது அண்டத்தின்

கடவுளைப் போற்றுங்கள்;

எல்லா இடங்களிலும் அரியன

பெரியன செய்பவரை, பிறப்பிலிருந்து

நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை,

தம் இரக்கத்திற்கு ஏற்ப

நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.

23அவர் நமக்கு மனமகிழ்ச்சியை

அளிப்பாராக; இஸ்ரயேலில்

முந்திய நாள்களில் இருந்ததுபோல

நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.

24அவருடைய இரக்கம் நம்முடன்

என்றும் இருப்பதாக;

நம் நாள்களில் அவர்

நம்மை விடுவிப்பாராக.

அருவருப்பான மக்களினத்தார்

25இரண்டு வகை மக்களினத்தாரை

என் உள்ளம் வெறுக்கிறது;

மூன்றாம் வகையினர்

மக்களினத்தாரே அல்ல.

26அவர்கள்;

சமாரியா மலைமீது வாழ்வோர்,

பெலிஸ்தியர், செக்கேமில்

குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.

முடிவுரை

27எருசலேம் வாழ் எலயாசரின்

மகனான சீராக்கின் மைந்தர்

ஏசுவாகிய நான் ஞானத்தை

என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்;

கூர்மதியையும் அறிவாற்றலையும்

தரும் நற்பயிற்சி அடங்கியுள்ள

இந்நூலை எழுதியுள்ளேன்.

28இவற்றில் ஈடுபாடு

காட்டுவோர் பேறுபெற்றோர்;

தம் உள்ளத்தில் இவற்றை

இருத்துவோர் ஞானியர் ஆவர்.

29இவற்றைக் கடைப்பிடிப்போர்

அனைத்திலும் ஆற்றல் பெறுவர்.

ஆண்டவருடைய ஒளியே

அவர்களுக்கு வழி.


50:11 சாஞா 18:24.
50:16 எண் 10:10.
50:20 எண் 6:24-27.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.