எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பாபிலோனுக்கு எதிராக
1பாபிலோனைக் குறித்தும் கல்தேயரின் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் அருளிய வாக்கு:
2மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்;
பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்;
முழக்கம் செய்யுங்கள்;
‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது;
பேல் சிறுமையுற்றது;
மெரோதாக்கு உடைக்கப்பட்டது;
அதன் சிலைகள் சிறுமையுற்றன;
அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன,’ என்று
மறைக்காமல் அறிக்கையிடுங்கள்.
3ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்.
4ஆண்டவர் கூறுகிறார்: அந்நாள்களில் — அக்காலத்தில் — இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் சேர்ந்து வருவார்கள்; அழுது கொண்டே திரும்பி வருவார்கள்; தங்கள் கடவுளான ஆண்டவரை அவர்கள் தேடுவார்கள்.
5அவர்கள் சீயோனை நோக்கியவண்ணம், அங்குப் போகும் வழியைக் கேட்பார்கள்; ‘வாருங்கள்; மறக்கப்படாத, என்றுமுள உடன்படிக்கை மூலம் ஆண்டவரோடு நம்மையே இணைத்துக்கொள்வோம்’ என்பார்கள்.
6என் மக்கள் காணாமற்போன ஆடு போன்றவர்கள். அவர்களின் ஆயர்கள் அவர்களை வழி தவறிப் போகச் செய்தார்கள்; மலைகள் மேல் அவர்களைக் கலங்கடித்தார்கள். மலைக்கும் குன்றுக்கும் இடையில் மக்கள் அலைந்து திரிந்தார்கள்; தங்கள் உறைவிடத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
7பார்த்தவர் எல்லாரும் அவர்களை விழுங்கினர். ‘நாங்கள் குற்றவாளிகள் அல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களின் உண்மையான உறைவிடமும், தங்கள் மூதாதையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்தார்கள்’ என்று அவர்களுடைய பகைவர் சொல்லிக்கொண்டனர்.
8பாபிலோனினின்று தப்பியோடுங்கள்; கல்தேயரின் நாட்டினின்று வெளியேறுங்கள்; மந்தைக்கு முன் செல்லும் கிடாய்களைப்போல் இருங்கள்.
9ஏனெனில் நான் வடக்கு நாட்டினின்று பெரிய மக்களினங்களின் திரளைப் பாபிலோனுக்கு எதிராகத் தூண்டி விட்டுப் பாய்ந்து வரச்செய்வேன். அவை அதற்கு எதிராகப் படையெடுத்து வர, அது கைப்பற்றப்படும். அவர்களின் அம்புகள், வெறுங்கையாய்த் திரும்பி வராத தேர்ச்சி பெற்ற வீரர் போன்றவை.
10கல்தேயா சூறையாடப்படும்; அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
11என் உரிமைச் சொத்தைச்
சூறையாடியவர்களே,
நீங்கள் அக்களித்தாலும்,
அகமகிழ்ந்தாலும்,
புல்கண்ட இளம்பசுபோல்
துள்ளிக் குதித்தாலும்,
பொலிகுதிரைப்போலக்
கனைத்தாலும்,
12உங்கள் அன்னை
பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்;
உங்களை ஈன்றெடுத்தவள்
இகழ்ச்சிக்கு ஆளாவாள்;
மக்களுள் அவளே
கடையளாய் இருப்பாள்;
வறண்ட, வெறுமையான
பாலைநிலம் ஆவாள்.
13ஆண்டவருடைய வெஞ்சினத்தால்
அது குடியற்றுப்போகும்;
முற்றிலும் பாழடைந்துபோகும்;
பாபிலோனைக் கடந்து செல்லும்
எவனும் அதிர்ச்சி அடைவான்;
அதன் தோல்வி கண்டு
ஏளனம் செய்வான்.
14வில்வீரர்களே, நீங்கள் அனைவரும்
பாபிலோனுக்கு எதிராக எப்பக்கமும்
அணிவகுத்து வாருங்கள்.
அதன்மீது அம்பு எய்யுங்கள்,
அம்பு மாரி பொழியுங்கள்;
அது ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்துள்ளது.
15எப்பக்கமும் அதற்கு எதிராகக்
குரல் எழுப்புங்கள்.
அது சரணடைந்துவிட்டது.
அதன்கொத்தளங்கள் வீழ்ந்தன;
அதன் மதில்கள் தகர்ந்தன.
இது ஆண்டவரின்
பழிவாங்குதல் ஆகும்.
நீங்களும் அதனைப் பழிவாங்குங்கள்;
அது செய்ததுபோல்
நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.
16விதைப்பவனைப் பாபிலோனினின்று
அழித்துப் போடுங்கள்;
அறுவடைக் காலத்தில்
அரிவாள் எடுப்பவனையும்
வீழ்த்தி விடுங்கள்;
கொடுங்கோலனின் வாளை முன்னிட்டு,
அவர்கள் ஒவ்வொருவனும்
தன் சொந்த மக்களிடம்
திரும்பிப் போகட்டும்;
அவர்கள் எல்லாரும் தங்கள்
சொந்த நாட்டுக்கே தப்பியோடட்டும்.
17இஸ்ரயேல் வேட்டையாடப்படும் ஆட்டுக்கு ஒப்பாகும். அது சிங்கங்களால் துரத்தியடிக்கப்பட்டது. முதன்முதலில் அசீரிய மன்னன் அதை விழுங்கினான்; இறுதியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அதன் எலும்புகளை முறித்துப் போட்டான்.
18ஆகவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ! அசீரிய மன்னனை நான் தண்டித்தது போன்று, பாபிலோனிய மன்னனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.
19நான் இஸ்ரயேலை அதன் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்ப அழைத்து வருவேன். கர்மேலிலும் பாசானிலும் அது மேயும்; எப்ராயிம் மலைகளிலும் கிலயாதிலும் அது வயிறு புடைக்கத்தின்னும்.
20அந்நாள்களில் — அக்காலத்தில் — இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்; ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்; ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
21மெரத்தாயிம் நாட்டுக்கு
எதிராகப் புறப்படு;
பெக்கோதின் குடிகளை
எதிர்த்துமுன்னேறு;
அவர்களை வெட்டி வீழ்த்து;
முற்றிலும் அழித்துப்போடு;
நான் கட்டளையிட்ட அனைத்தையும்
நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.
22நாட்டில் போரின் ஆரவாரம்
கேட்கின்றது;
பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.
23மண்ணுலகு முழுவதற்கும்
சம்மட்டியாய்த் திகழ்ந்தது
நொறுங்கித் தூள்தூளானது எப்படி ?
மக்களினங்கள் நடுவே பாபிலோன்
பாழடைந்துபோனது எவ்வாறு!
24பாபிலோனே, நான் உனக்குக்
கண்ணி வைத்தேன்;
தெரியாமலே நீ அதில்
மாட்டிக் கொண்டாய்;
நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்;
ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.
25ஆண்டவர் தம் படைக்கலக்
கொட்டிலைத் திறந்து விட்டார்;
தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை
வெளிக்கொணர்ந்தார்;
கல்தேயர் நாட்டில்
படைகளின் ஆண்டவராகிய கடவுள்
ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.
26எல்லாத் திக்குகளினின்றும்
அதை எதிர்த்து வாருங்கள்;
அதன் களஞ்சியங்களை
உடைத்துத்திறங்கள்;
தானியக் குவியல்போல
அதைக் குவித்து வையுங்கள்;
அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்;
அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.
27அதன் காளைகள் அனைத்தையும்
வெட்டி வீழ்த்துங்கள்;
அவை கொலைக்களத்திற்குச்
செல்லட்டும்;
அவற்றுக்கு ஐயோ கேடு!
அவற்றின் நாள் வந்துவிட்டது;
அவற்றின் தண்டனைக் காலம்
நெருங்கிவிட்டது.
28இதோ! அவர்கள் பாபிலோனிய நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்; தம்கோவிலை முன்னிட்டு நம் ஆண்டவராகிய கடவுள் பழி வாங்கியதைச் சீயோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
29வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்; அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்; அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.
30எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்; அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
31இறுமாப்புக் கொண்டவனே!
நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்,
என்கிறார் படைகளின்
ஆண்டவராகிய தலைவர்.
உனது நாள் வந்துவிட்டது;
உன்னை நான் தண்டிக்கும் காலம்
நெருங்கி விட்டது.
32இறுமாப்புக் கொண்டவன்
இடறிக் கீழே விழுவான்;
அவனைத் தூக்கிவிட யாரும் இலர்;
அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்;
சுற்றிலும் உள்ள அனைத்தையும்
அது சுட்டெரிக்கும்.
33படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்; அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்;
34அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்; பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.
35கல்தேயர்மேலும்,
பாபிலோன் குடிமக்கள்மேலும்,
அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும்
ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36குறிசொல்வோர் மேல் வாள் வரும்;
அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்;
அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்;
அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
37அதன் குதிரைகள்மேலும்,
தேர்கள் மேலும்
அதன் நடுவே இருக்கும்
கூலிப் படைகள்மேலும் வாள் வரும்;
அவர்கள் பேடிகள் ஆவார்கள்;
அதன் செல்வங்கள்
அனைத்தின் மேலும் வாள் வரும்;
அவை கொள்ளையடிக்கப்படும்.
38அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்;
அவை வறண்டுபோகும்;
அது சிலைகள் மலிந்த நாடு;
அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.
39எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்; தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை; காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.
40கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்; எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.
41இதோ! வடக்கினின்று
ஓர் இனம் வருகின்றது;
வலிமை வாய்ந்த மக்களினமும்
மன்னர் பலரும்
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
கிளர்ந்தெழுகின்றனர்.
42அவர்கள் வில்லும் ஈட்டியும்
ஏந்தியுள்ளார்கள்;
அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்;
அவர்களின் ஆரவாரம்
கடலின் இரைச்சலைப் போன்றது;
மகளே பாபிலோன்!
அவர்கள் போருக்கு அணிவகுத்துக்
குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு
உனக்கு எதிராய் வருகின்றார்கள்.
43அவர்கள் வரும் செய்திபற்றிக்
கேள்வியுற்ற,
பாபிலோனிய மன்னனின் கைகள்
தளர்ந்துபோயின;
கடுந்துயர் அவனை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்ணைப்போல்
அவன் தவிக்கின்றான்.
44யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?
45எனவே பாபிலோனுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், கல்தேய நாட்டுக்கு எதிராக அவர் கொண்டுள்ள எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
46பாபிலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.