புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5
அன்பிற்குரியவரே,
கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.
நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக் கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 9b, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.