Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 9, 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 9, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25

அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!

1ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!2உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! – பல்லவி

3உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். – பல்லவி

4ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.5ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 21

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2023 மார் ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22
வி 2 9 16 23
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.