Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 4, 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 4, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 4ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21

சகோதரர் சகோதரிகளே,

இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.

உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாய் இருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.

என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.2பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.3aஅவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; – பல்லவி

3bதம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2023 மார் ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22
வி 2 9 16 23
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.