பொதுக்காலம் 6ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
உலகம் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்று நம்பிக்கையால் புரிந்துகொள்கிறோம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-7
சகோதரர் சகோதரிகளே,
நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்துகொள்கிறோம்.
நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியை விட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் குறித்துக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்துபோன போதிலும் இந்த ஆபேல் நம்பிக்கையின் மூலம் இன்னும் பேசிக்கொண்டேயிருக்கிறார்.
நம்பிக்கையாலேயே ஏனோக்கு சாவுக்கு உட்படாதபடி கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை எடுத்துக்கொண்டதால் அவர் காணாமற் போய்விட்டார். அவர் மேலே எடுத்துக்கொள்ளப்படும் முன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார். நம்பிக்கையினால் அன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.
நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 145: 2-3. 4-5. 10-11 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவரே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருத்தூதர்கள் முன், இயேசு தோற்றம் மாறினார்
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-13
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
அவர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள்படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.