பொதுக்காலம் 32ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9
தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே,
தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது.
அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.
கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 1,2. 10,11. 17,18 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.
லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.”
அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.