பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18
என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.
நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். அது போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில்
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.