பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 18: 1-2abc,2def-3. 46,50ab (பல்லவி: 1)
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
இரண்டாம் வாசகம்
இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28
சகோதரர் சகோதரிகளே,
லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.
இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்.
திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.