பொதுக்காலம் 14ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10
ஆண்டவர் கூறியது: மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப் படை இல்லாமற் போகச் செய்வார்; எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 145: 1-2. 8-9. 10-11. 13ab-14 (பல்லவி: 1a)
பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி
13abஉமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 9, 11-13
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.