பொதுக்காலம் 15ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-6, 9-12
அந்நாள்களில்
மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார். அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார். அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார்.
மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.”
மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்றார். அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே” என்றுரைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 6-7 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில்
இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.