தூய செபமாலை அன்னை
முதல் வாசகம்
இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14
இயேசு விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55
பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா! அருள்நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.