Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 17, 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 17, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 28ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25

சகோதரர் சகோதரிகளே,

நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் – அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் – அந்த மீட்பு உண்டு. ஏனெனில் “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.

இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் – அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் – உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.

ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 1a)

பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன.

1வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. – பல்லவி

3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.4ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41

அக்காலத்தில்

இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2023 நவ ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.