பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)
பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.