பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.
நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை. அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப் படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா?
ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலி 3: 8-9
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.