பொதுக்காலம் 27ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
அரிவாளை எடுத்து அறுங்கள். பயிர் முற்றிவிட்டது.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 3: 12-21
ஆண்டவர் கூறுவது:
வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது.
திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது; ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது. கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன. ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.
அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)
பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில்
இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.