பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22
நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.
ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)
பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்
இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.
உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.