பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a
சகோதரர் சகோதரிகளே,
என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.
நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 66,68. 76,77. 93,94 (பல்லவி: 68b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.