புனிதர்கள் மறைப்பணியாளர் பவுல் மீகி, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
புனித கொன்சாலோ கார்சியா – மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித கொன்சாலோ கார்சியா – மறைச்சாட்சி
முதல் வாசகம்
உம் இரக்கப் பெருக்கத்திற்கும் பெயருக்கும் ஏற்ப என்னை விடுவித்தீர்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 1-8
மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துவேன்; என் மீட்பராகிய கடவுளே, உம்மைப் புகழ்வேன்; உமது பெயருக்கு நன்றி சொல்வேன். நீரே என் பாதுகாவலரும் துணைவரும் ஆனீர்; அழிவிலிருந்து என் உடலைக் காப்பாற்றினீர்; பழிகூறும் நாவின் கண்ணியிலிருந்தும் பொய்யை உருவாக்கும் உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்; என்னை எதிர்த்து நின்றவர்முன் நீரே என் துணையானீர்; என்னை விடுவித்தீர். உம் இரக்கப் பெருக்கத்திற்கும் பெயருக்கும் ஏற்ப, என்னைக் கடித்து விழுங்கத் துடித்தவர்களின் பற்களிலிருந்தும் என் உயிரைப் பறிக்கத் தேடியவர்களின் கைகளிலிருந்தும் நான் பட்ட பல துன்பங்களிலிருந்தும் என்னை விடுவித்தீர். என்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர். பாதாளத்தின் ஆழத்தினின்றும் மாசுபடிந்த நாவினின்றும் பொய்ச் சொற்களினின்றும் என்னைக் காத்தீர். மன்னரிடம் பழி சாற்றும் அநீதியான நாவினின்றும் என்னை விடுவித்தீர்.
என் உயிர் சாவை நெருங்கி வந்தது; என் வாழ்க்கை ஆழ்ந்த பாதாளத்தின் அண்மையில் இருந்தது.
என்னை எப்புறத்திலும் அவர்கள் வளைத்துக்கொண்டார்கள். எனக்கு உதவி செய்வோர் யாருமில்லை. மனிதரின் உதவியைத் தேடினேன்; உதவ யாருமில்லை. அப்போது ஆண்டவரே, உம் இரக்கத்தையும், என்றென்றும் நீர் ஆற்றிவரும் செயல்களையும் நினைவுகூர்ந்தேன்; உமக்காகக் காத்திருப்போரை எவ்வாறு விடுவிக்கிறீர் என்பதையும் பகைவரின் கையிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்கிறீர் என்பதையும் எண்ணிப் பார்த்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5)
பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
இரண்டாம் வாசகம்
செத்துக்கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 4-10
சகோதரர் சகோதரிகளே,
அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19a, 20b
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20
அக்காலத்தில்
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.