2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 இதன் பிறகு தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2 அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களை தரையில் படுக்கச் செய்து நூலால் அளந்து இருபகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.
3 மேலும் யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அததேசரையும் தாவீது தோற்கடித்தார்.
4 தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.
5 தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அததேசருக்கு உதவவந்தபோது, இருபத்து இரண்டாயிரம் பேரைத் தாவீது கொன்றார்.
6 பிறகு தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்கு கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு சிறப்பு அளித்தார்.
7 அததேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
8 அததேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாவிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.
9 அததசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.
10 உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்; ஏனெனில் தோயி அத்தேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டு வந்தான்.
11 இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்கு காணிக்கையாக்கினார்.
12 அந்நாடுகளாவன; ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர், சோபாவின் மன்னன் அத்தேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.
13 தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்கு பெரும் புகழ் உண்டாயிற்று.
14 அவர் ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்கு கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.
15 தாவீது அனைத்து இஸ்ரயேல் மீதும் ஆட்சிப்புரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.
16 செரூயஅp;யாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபாத்து ஆவணக் காப்பாளராகவும்
17 அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர்.
18 யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.