2 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர்கள் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது;;

2 ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;

3 என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர்; கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.

4 போற்றுதற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

5 ஏனெனில், சாவின் அலைகள் என்னை சூழ்ந்துக் கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

6 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னை சிக்க வைத்தன.

7 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கி கதறினேன். தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.

8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம கடுஞ்சினத்தால் அவை நடுங்கின.

9 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்பு கனல் வெளிப்பட்டது.

10 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது.

11 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.

12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.

13 அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெறித்தது.

14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.

15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களை சிதறடித்தார்; மின்னல்களால் அவர்களை கலங்கடித்தார்.

16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.

17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப்பிடித்துக்கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார்.

18 வலிமைமிகு எதிரியிடமிருந்து என்னை விடுவித்தார். என்னை விட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்.

19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்வரே எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.

20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னைவிடுவித்தார்.

21 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார் என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.

22 ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.

23 அவர் தம் நீதி நெறிமுறைகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.

25 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன்.

26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!

27 தூயோர்க்கு தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.

28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.

29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.

30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்.

31 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.

32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?

33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.

34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.

35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!

36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினிர்; உமது துணையால் என்னை நீர் பெருமைப்படுத்தினீர்.

37 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை.

38 எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை.

39 நான்அவர்களை கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை; அவர்கள் என் காலடியில் வீழ்ந்துகிடந்தார்கள்.

40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.

41 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.

42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால் அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால் அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

43 எனவே நான் அவர்களை மண்ணின் பழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெரு சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.

44 மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.

45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.

46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!

48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!

49 என் பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்

50 ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.

51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்! தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கு அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!

Free Email Updates !
Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.