அக்குவினோ நகர் புனித தோமா – மறைப்பணியாளர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின்மீது அன்புகொண்டேன்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16
நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.
உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.
கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 9-10. 11-12. 13-14 (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 23: 9b, 10b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் ஆசிரியர் என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 8-12
அக்காலத்தில்
இயேசு கூறியது: “நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.
இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.
தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.