சனவரி 6
முதல் வாசகம்
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13
அன்பார்ந்தவர்களே,
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12a)
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11
அக்காலத்தில்
யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.