பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59
அந்நாள்களில்
யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள்.
நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.
எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.
மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
1 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12b-d (பல்லவி: 13b)
பல்லவி: மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48
அக்காலத்தில்
இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.