Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 26, 2023

திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 26, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்

பெருவிழா

முதல் வாசகம்

என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17

தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன். எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-2. 3. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.2பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். – பல்லவி

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் வருகையின்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26, 28

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர்-2023 டிச ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.