புனித பபியான் – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித செபஸ்தியார் – மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித பபியான் – திருத்தந்தை, மறைச்சாட்சி
முதல் வாசகம்
உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4
அன்பிற்குரியவரே,
கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்பட இருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள்.
தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9 (பல்லவி: 7a, 8a)
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற `இதோ வருகின்றேன்.’
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-17
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களோடு உணவருந்தியபின் சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார்.
அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.
இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார்.
‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.