புனித ஜோசப் வாஸ் – மறைப்பணியாளர்
முதல் வாசகம்
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10
பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
எரேமியாவாகிய எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: ‘தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்’.
நான், ‘என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே’ என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: “ ‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,’ என்கிறார் ஆண்டவர்.”
ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 (பல்லவி: 3a)
பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.
இரண்டாம் வாசகம்
பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர, என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 19-23
சகோதரர் சகோதரிகளே,
நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போல் ஆனேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாய் இருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போல் ஆனேன். திருச்சட்டத்திற்கு உட்பாடதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவன் அல்ல; ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 23: 11, 12ab
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9
அக்காலத்தில்
ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.
வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.