Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2023 – வ2

திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2023 – வ2

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-13

சகோதரர் சகோதரிகளே,

இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது: உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும்.

ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவர் என எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறை மக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. – பல்லவி

3நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:4உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ – பல்லவி

20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.21என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். – பல்லவி

24என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப் பற்றிக் கவலை இல்லை.

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர்-2023 டிச ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.