Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூலை 4, 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 4, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 13ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 19: 15-29

அந்நாள்களில்

பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, “நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்” என்று வற்புறுத்திக் கூறினார்கள். அவர் காலந்தாழ்த்தினார்.

ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, “நீ உயிர் தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்” என்றார்கள். லோத்து அவர்களை நோக்கி: “என் தலைவர்களே, வேண்டாம். உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப் போவேன். எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்” என்றார்.

அதற்கு தூதர் ஒருவர், “நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான்அழிக்க மாட்டேன். நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்றார். இதனால் அந்த நகருக்குச் “சோவார்” என்னும் பெயர் வழங்கிற்று.

லோத்து சோவாரை அடைந்தபோது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான். அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார். அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள்.

ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார். அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.

கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 26: 2-3. 9-10. 11-12 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது.

2ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்;3ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். – பல்லவி

9பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!10அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக் கையில் நிறையக் கையூட்டு. – பல்லவி

11நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும்.12என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 130: 5

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில்

இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2023 ஆக ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more