புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-2, 5-7
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக்கேடான செயல்களை நாங்கள் தவிர்த்துவிட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.
நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப்பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.
இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 30-31 (பல்லவி: 30a)
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 15: 5
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-45
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.