திருவெளிப்பாடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
இறுதித் தண்டனை
1பின் வலிமைமிக்க வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையாக அணிந்திருந்தார். அவரது தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவரது முகம் கதிரவன்போலவும் கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.
2திறக்கப்பட்ட ஒரு சிறிய சுருளேட்டை அவர் தம் கையில் வைத்திருந்தார். தம் வலது காலைக் கடலின் மீதும் இடது காலை நிலத்தின் மீதும் வைத்திருந்தார்.
3சிங்கம் கர்ச்சிப்பது போல் உரத்த குரலில் கத்தினார். இவ்வாறு அவர் கத்தியபொழுது ஏழு இடிகள் முழங்கி எதிரொலித்தன.
4அந்த ஏழு இடிகளும் முழங்கியபொழுது நான் எழுத ஆயத்தமானேன். ஆனால் விண்ணகத்திலிருந்து வந்த ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை மறைத்து வை; எழுதாதே” என்று சொல்லக் கேட்டேன்.
5நான் கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கக் கண்ட வானதூதர் தம் வலக்கையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தினார்.
6விண்ணையும் அதில் உள்ளவற்றையும், மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு, “இனித் தாமதம் கூடாது.
7ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுள் தம் பணியாளர்களான இறைவாக்கினர்களுக்கு அறிவித்திருந்தபடியே அவரது மறைவான திட்டம் நிறைவேறும்” என்றார்.
8விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது.
9நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார்.
10உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப்போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.
11“பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர்பற்றி நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.