Home » Tamil » யோபு அதிகாரம் – 3 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 3 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்

1இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.

2யோபு கூறியது:

3“ஒழிக நான் பிறந்த அந்த நாளே!

ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்

சொல்லிய அந்த இரவே!

4அந்த நாள் இருளாகட்டும்;

மேலிருந்து கடவுள் அதை

நோக்காதிருக்கட்டும்; ஒளியும்

அதன்மேல் வீசாதிருக்கட்டும்.

5காரிருளும் சாவிருட்டும்

அதைக் கவ்விக்கொள்ளட்டும்;

கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;

பகலை இருளாக்குபவை

அதனை அச்சுறுத்தட்டும்.

6அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக!

ஆண்டின் நாள்கணக்கினின்று

அது அகற்றப்படுவதாக!

திங்கள் எண்ணிக்கையிலும்

அது சேரா தொழிக!

7அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;

மகிழ்ச்சியொலி ஒன்றும்

அதில் எழாதிருக்கட்டும்;

8பகலைப் பழிப்போரும்

லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்

அதனைப் பழிக்கட்டும்.

9அதன் விடியற்காலை விண்மீன்கள்

இருண்டு போகட்டும்;

அது விடியலொளிக்குக் காத்திருக்க

அதுவும் இல்லாமற்போகட்டும்;

அது வைகறையின் கண்விழிப்பைக்

காணாதிருக்கட்டும்.

10ஏனெனில் என் தாயின் கருப்பையை

அவ்விரவு அடைக்காமற்போயிற்றே!

என் கண்களினின்று வேதனையை

அது மறைக்காமற் போயிற்றே!

11கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?

கருவறையினின்று வெளிப்பட்டவுடனே

நான் ஒழிந்திருக்கலாகாதா?

12என்னை ஏந்த முழங்கால்கள்

முன் வந்ததேன்?

நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?

13இல்லாதிருந்திருந்தால்,

நான் வெறுமனே கிடந்து

துயில் கொண்டிருப்பேன்.

14பாழானவைகளைத்

தமக்குக் கட்டிக்கொண்ட

மாநிலத்து மன்னர்களோடும்

அமைச்சர்களோடும்

15அல்லது பொன்னை

மிகுதியிருக்கக் கொண்டு,

வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின

உயர்குடி மக்களோடும்

நான் உறங்கியிருந்திருப்பேன்.

16அல்லது முழுமை பெறாக்

கருவைப் போலவும்

ஒளியைக் காணாக்

குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.

17அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.

களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

18சிறைப்பட்டோர் அங்கு

நிம்மதியாகக் கூடியிருப்பர்;

ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.

19சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;

அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.

20உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?

உள்ளம் கசந்தோர்க்கு

உயிர் கொடுப்பானேன்?

21சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;

அதைப் புதையலினும் மேலாய்க்

கருதித் தேடுகிறார்கள்.

ஆனால் அதுவோ வந்த பாடில்லை.

22கல்லறை காணின் களிப்பெய்தி

அகமகிழ்வோர்க்கு,

வாழ்வு வழங்கப்படுவதேன்?

23எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,

எவரைச் சுற்றிலும் கடவுள்

தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,

அவருக்கு ஒளியால் என்ன பயன்?

24பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;

வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.

25ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?

அதுவே எனக்கு நேர்ந்தது;

திகிலுற்றது எதுவோ

அதுவே என்மேல் விழுந்தது.

26எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை;

அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது.”


3:1-19 எரே 20:14-18.
3:21 திவெ 9:6.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.