தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது உனக்குத் தோன்றின இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு” என்றார்.
2 யாக்கோபு தம் வீட்டாரையும் அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, “உங்களிடம் உள்ள வேற்றுத் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
3 எழுந்து வாருங்கள்; பெத்தேலுக்குச் செல்வோம். அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித் துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்” என்றார்.
4 அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா வேற்றுத் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க, அவர் அவற்றைச் செக்கேம் அருகிலிருந்த ஒரு கருவாலி மரத்தின் அருகே புதைத்தார்.
5 அவர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது, அவர்களைச் சூழ்ந்திருந்த எல்லா நகரத்தினருக்கும் கடவுள் திகிலூட்டினார். எனவே, அவர்கள் யாக்கோபின் புதல்வரைத் துரத்திச் செல்லவில்லை.
6 இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.
7 யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ஏல்-பெத்தேல் என்று பெயரிட்டார்.
8 அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே. அவ்விடத்திற்கு “அல்லோன்-பாகூத்து” என்னும் பெயர் வழங்கலாயிற்று.
9 யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வந்தபின் கடவுள் மீண்டும் அவருக்குத் தோன்றி, ஆசி வழங்கினார்.
10 கடவுள் அவரை நோக்கி, “உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் “இஸ்ரயேல்” எனப்படும்” என்றுரைத்து “இஸ்ரயேல்” என்று அவருக்குப் பெயரிட்டார்.
11 மேலும், கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.
12 ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன்வழி மரபினருக்கும் கொடுப்பேன் என்றார்.
13 பின்னர் கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.
14 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார்.
15 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் “பெத்தேல்” என்று பெயரிட்டார்.
16 பின்பு அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
17 பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, “அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!” என்றாள்.
18 அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப் “பென்-ஓனி” என்று பெயரிட்டார். அவன் தந்தையோ அவனைப் “பென்யமின் “() என்று அழைத்தார்.
19 இவ்வாறு ராகேல் இறந்துபோக, பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.
20 யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார். இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.
21 மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார்.
22 இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூயஅp;பன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான். இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார். யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன;
23 லேயாவின் புதல்வர்கள்; யாக்கோபின் தலைமகன் ரூயஅp;பன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
24 ராகேலின் புதல்வர்கள்; யோசேப்பு, பென்யமின்.
25 ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்; தாண், நப்தலி.
26 லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்; காத்து, ஆசேர். இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.
27 ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் கிரியத்து அர்பா என்ற எபிரோன் ஆகும்.யாக்கோபு தம் தந்தை ஈசாக்கிடம் மம்ரே என்னும் கிரியத்து அர்பாவுக்கு வந்தார். அதுவே ஆபிரகாமும் ஈசாக்கும் குடியிருந்த எபிரோன் ஆகும்.
28 ஈசாக்கு நூற்றெண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29 அவர் வயது முதிர்ந்தவராய் இறந்து, தம் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் புதல்வர்கள் ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தனர்.
விடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை
Visit Catholic Gallery Main Site
Related Articles