HomeTamilதொடக்கநூல் அதிகாரம் - 27 - திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 27 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசிவழங்குதல்

1ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றார்; ஏசா, “இதோ வந்துவிட்டேன்” என்றான்.

2அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.

3இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.

4நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.

5ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக்கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன்,

6அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, “உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. அவர் சொன்னது;

7‘நீ போய் வேட்டையாடி, வேட்டைக்கறியை சமைத்துக் கொண்டு வா. நான் உண்பேன். நான் சாவதற்கு முன் ஆண்டவர் திருமுன் உனக்கு ஆசி வழங்குவேன்.’

8இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.

9உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.

10நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்” என்றார்.

11யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், “என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்; நானோ மிருதுவான உடல் கொண்டவன்.

12என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்” என்றான்.

13ஆனால், அவன் தாய் அவனிடம், “மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்; நான் சொல்வதை மட்டும் செய்; போ; அவற்றை என்னிடம் கொண்டு வா” என்றார்.

14அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.

15மேலும், ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.

16அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார்.

17அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.

18அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, “அப்பா” என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, “ஆம் மகனே, நீ எந்த மகன்?” என்று கேட்க,

19யாக்கோபு தன் தந்தையிடம், “நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்” என்றான்.

20ஈசாக்கு தம் மகனை நோக்கி “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான்.

21ஈசாக்கு யாக்கோபிடம் “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார்.

22யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான் ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து “குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்” என்றார்.

23அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே, அவனுக்கு ஆசி வழங்கினார்.

24மீண்டும் அவர் “நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?” என்று வினவ, அவனும் “ஆம்” என்றான்.

25அப்பொழுது அவர், “மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.

26அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி “மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றார்.

27அவனும் அருகில் போய் அவரை முத்தமிட ஈசாக்குஅவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே:

“இதோ, என் மகனிடமிருந்து

எழும்பும் நறுமணம்!

ஆண்டவரின் ஆசி பெற்ற

விளைநிலத்தின் வாசனையாம்!

28வானின் பனித்துளியும்

மண்ணின் செழுமையும்,

மிகுந்த தானியமும்,

திராட்சை இரசமும்

கடவுள் உனக்கு வழங்குவாராக!

29நாடுகள் உனக்குப்

பணி புரிந்திடுக!

மக்கள் உனக்குப் பணிந்திடுக!

உன்றன் சோதரர்க்குத்

தலைவன் நீ ஆகிவிடுவாய்!

உன் அன்னையின் மைந்தர்

உன்னடி பணிந்திடுவர்!

உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக!

உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!”

ஏசா ஈசாக்கிடம் ஆசி வேண்டல்

30இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும், யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.

31அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, “என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக” என்றான்.

32அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி “நீ யார்” என, அவன்: “நான் தான் உங்கள் தலைப்பேறான மகன் ஏசா” என்றான்.

33ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி “அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்” என்றார்.

34ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, “அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்” என்றான்.

35அதற்கு அவர்; “உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்” என்றார்.

36அதைக் கேட்ட ஏசா, “யாக்கோபு* என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்” என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி; “நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.

37ஈசாக்கு ஏசாவிடம் “நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?” என்று சொல்ல,

38ஏசா அவரை நோக்கி, “அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா” என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.

39அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக,

“உன் குடியிருப்புக்கு

நிலத்தின் செழுமையோ

மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.

40நீ உன் வாளினால்

வாழ்க்கை நடத்தி

உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்;

நீ கிளர்ந்து எழும்போது

உன் கழுத்தில் அவன் சுமத்திய

நுகத்தடியை முறித்து விடுவாய்” என்றார்.

யாக்கோபின் பெற்றோர் அவனை லாபானிடம் அனுப்புதல்

41தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, “என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

42தம்மூத்த மகன் ஏசாவின் திட்டம் பற்றி ரெபேக்கா கேள்விப்பட்டதும் அவர் ஆளனுப்பித் தம் இளைய மகன் யாக்கோபை அழைத்து, “இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான்.

43ஆகையால், மகனே நான் சொல்வதைக் கேள். உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போய்,

44உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.

45தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?” என்றார்.

46பின் ரெபேக்கா ஈசாக்கை நோக்கி “இத்தியப் பெண்களை முன்னிட்டு என் வாழ்க்கை எனக்குச் சலித்துப் போயிற்று. யாக்கோபும் இவர்களைப் போன்ற இந்நாட்டுப் பெண்களினின்றும் ஒருத்தியை மணந்து கொண்டால் என் வாழ்க்கை என்ன ஆவது?” என்றார்.


27:27-29 எபி 11:20.
27:29 தொநூ 12:3.
27:36 தொநூ 25:29-34.
27:38 எபி 12:17.
27:39-40 எபி 11:20.
27:40 தொநூ 36:8; 2 அர 8:20.


27:36 * எபிரேயத்தில், ‘ஏமாற்றுபவன்’ என்பது பொருள்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://www.getcooltricks.com/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.