எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எருசலேம் தண்டிக்கப்படல்
1அவர் என் செவிகளில் உரத்த குரலில் “நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்” என்றார்.
2இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது. அவர்களுடன் நார்ப்பட்டு உடுத்தி, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர்.
3அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது. உடனே ஆண்டவர் நார்ப்பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதரை அழைத்தார்.
4பின் ஆண்டவர் அவரை நோக்கி, “நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு” என்றார்.
5என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்; இரக்கம் காட்டவேண்டாம்.
6முதியோர், இளைஞர், கன்னியர், குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள். அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள். என் தூயகத்திலிருந்து தொடங்குங்கள்.” அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த முதியோரிலிருந்து தொடங்கினர்.
7அவர் அவர்களை நோக்கி, “கோவிலைக் கறைப்படுத்துங்கள்; முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்; புறப்படுங்கள்” என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.
8அவர்கள் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தபோது, நான்மட்டும் தனியே இருந்தேன். நானோ முகங்குப்புற விழுந்து, “ஆ! தலைவராகிய ஆண்டவரே! நீர் உம் சீற்றத்தை எருசலேமின் மீது கொட்டி இஸ்ரயேலில் எஞ்சி இருப்போர் அனைவரையும் அழித்து விடுவீரோ?” என்று கத்தினேன்.
9அவர் என்னை நோக்கி, “இஸ்ரயேல், யூதா வீட்டார்களின் குற்றம் மிக மிகப்பெரிது. நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது. நகரில் புரட்டு மலிந்துள்ளது. ஏனெனில், ‘ஆண்டவர் நாட்டைக் கைநெகிழ்ந்து விட்டார்; அவர் எதையும் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கின்றனர்.
10ஆகவே, என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். அவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன்” என்றார்.
11இதோ, நார்ப்பட்டு உடுத்தி இடையில் மைக்கூட்டை வைத்திருந்த மனிதர் வந்து, “நீர் எனக்குக் கட்டளை இட்டவாறே நான் செய்துமுடித்து விட்டேன்” என்று அறிவித்தார்.