Home » Tamil » விடுதலைப் பயணம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

மோசேயின் அழைப்பு

1மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.

2அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் ,அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.

3“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.

4அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.

5அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில், நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார்.

6மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

7அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.

8எனவே, எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு — அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.

9இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.

10எனவே, இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.

11மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்றார்.

12அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன். மேலும், இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே” என்றுரைத்தார்.

13மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார்.

14கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

15கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்” என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

16போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.

17எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு — உங்களை நடத்திச் செல்வேன்’ என்று அறிவிப்பாய்.

18அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ‘எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ என்று சொல்லுங்கள்.

19என் கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.

20எனவே, என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின், அவன் உங்களை அனுப்பிவிடுவான்.

21அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.

22ஏனெனில், ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள். அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்.”


3:2-10 திப 7:30-34.
3:13 விப 6:2-3.
3:14 திவெ 1:4,8.
3:21-22 விப 12:35-36.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.