Home » 2 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது. தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார். சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.

தாவீதின் மக்கள்

2எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரியேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.

3கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன்; கெசூர் மன்னனான தால்மாயின் மகள் மாக்காவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.

4அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்;

5தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ரயாம் ஆறாம் மகன்; இவர்கள் தாவீதுக்கு எபிரோனில் பிறந்தவர்கள்.

அப்னேர் தாவீதுடன் சேர்ந்து கொள்ளுதல்

6சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையே வலுப்படுத்திக் கொண்டான்.

7அய்யாவின் மகளான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, “என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ ஏன் உறவு கொண்டாய்? என்று கேட்டான்.

8இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. “நான் என்ன, யூதாவுக்கு வாலாட்டும் நாயா? உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர்கள் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக்குறித்து குற்றஞ்சாட்டுகிறாய்!

9-10தாவீதுக்குக் கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே, சவுலின் வீட்டிலிருந்து அரசை நான் மாற்றச்செய்து, தாணிலிருந்து பெயேர்செபா வரை இஸ்ரயேல்மீதும் யூதாமீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால், கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமையானதுமான தண்டனையை அளிப்பாராக!” என்று அப்னேர் கூறினான்.

11இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதால் மறுமொழி ஏதும் பேசவில்லை.

12பிறகு, அப்னேர் தன் சார்பாகத் தாவீதிடம் தூதனுப்பி, “நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்துகொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கும்” என்று கூறினான்.

13தாவீது “நல்லது, நான் உன்னோடு உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால், ,உன்னிடமிருந்து நான் ஒன்றைக் கேட்கிறேன்: அதாவது, நீ என்முன் வரும்போது, சவுலின் மகள் மீக்காலைக் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே” என்று மறுமொழி கூறினார்.

14அதற்குப்பின், தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, “பெலிஸ்தியர் நூறுபேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு” என்று கேட்டார்.

15இஸ்பொசேத்து ஆளனுப்பி, அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.

16அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் “திரும்பிச் செல்” என்றான்; அவனும் திரும்பிச் சென்றான்.

17அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: “தாவீது உங்கள்மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக்கொண்டிருந்தீர்கள்.

18இப்போது அதை நிலை நாட்டுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தாவீதிடம், ‘என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலைப் பெலிஸ்தியரிடமிருந்தும் அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்’.

19அப்னேர் பென்யமினியரோடு தனியாகப் பேசியபின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரயேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் தாவீதிடம் எடுத்துக் கூறினான்.

20அப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவனோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.

21பிறகு அப்னேர் தாவீதிடம், “நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்குமுன் ஒன்றுதிரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்துகொள்ளட்டும், நீரும் உம் விருப்பப்படி ஆட்சி புரியலாம்” என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.

அப்னேர் கொலை செய்யப்படல்

22அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்துத் திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில், ஏற்கனவே அவர் வழியனுப்பப்பட்டுப் பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.

23யோவாபும் அவனோடு இருந்த படைவீரர் அனைவரும் வந்தபொழுது, “நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப, அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான்” என்று யோவாபிடம் கூறப்பட்டது.

24யோவாபு அரசனிடம் சென்று, “நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உம்மிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!

25நேரின் மகன் அப்னேரை உமக்குத் தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான்” என்றான்.

26யோவாபு தாவீதைவிட்டுச் சென்று, அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.

27அப்னேர் எபிரோனுக்குத் திரும்பிவந்ததும் யோவாபு அவனோடு தனிமையில் பேசுவதற்கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அங்கே அவனை வயிற்றில் குத்த, அவன் இறந்தான்.

28பிறகு, தாவீது இதைக் கேள்வியுற்றபோது, “நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின்மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்கள்.

29யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார்மீதும் அது விழட்டும். இரத்தக் கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பவனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள்’ என்றார்.

30தங்கள் சகோதரன் அசாவேலைக் கிபயோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றதற்காக யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் அவனைக் கொன்றார்கள்.

அப்னேர் அடக்கம் செய்யப்படல்

31“உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளுங்கள்; சாக்கு உடைகளை அணியுங்கள்; அப்னேருக்காகப் புலம்புங்கள்” என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீதும் நடந்து சென்றார்.

32அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம்குரலை உயர்த்தி அழுதார்; மக்கள் அனைவரும் அழுதார்கள்.

33அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்: “மூடன் மடிவதுபோல் அப்னேர் மடிய வேண்டுமா?

34உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர்முன் வீழ்பவன்போல, நீயும் வீழ்ந்தனயே!” மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காகப் புலம்பினார்கள்.

35பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து, பகலாக இருக்கும் போதே உண்ணும்படி அவரைத் தூண்டினர். “கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள்அதற்குத் தக்கவாறும் அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக!” என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்.

36மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனப்பட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்கள் அனைவருக்கும் நல்லதெனப்பட்டது.

37நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்குப் பங்கில்லை என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் அன்று தெரிய வந்தது.

38மேலும், அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: “இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?

39நான் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூயாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்!”


3:9-10 1 சாமு 15:28.
3:14 1 சாமு 18:27.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks