புனித மெர்சி ஆஞ்சலா – கன்னியர்
முதல் வாசகம்
ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7b-11
அன்பிற்குரியவர்களே,
இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட்டோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள் கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 148: 1-2. 11-13ab. 13c-14 (பல்லவி: 12a,13a காண்க)
பல்லவி: இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 34-37
அக்காலத்தில்
இயேசுவின் சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.
பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.