திருமுழுக்கு யோவானின் பிறப்பு (பெருவிழா) – திருவிழிப்புத் திருப்பலி
திருமுழுக்கு யோவானின் பிறப்பு
திருவிழிப்புத் திருப்பலி
முதல் வாசகம்
தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-10
யோசியாவின் நாள்களில்:
எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.”
நான், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே” என்றேன்.
ஆண்டவர் என்னிடம் கூறியது: “‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்.”
ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும்} அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15a,17 (பல்லவி: 6b)
பல்லவி: என் தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்.
இரண்டாம் வாசகம்
இந்த மீட்பைக் குறித்து இறைவாக்கினர் துருவித் துருவி ஆய்ந்தனர்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8-12
அன்புக்குரியவர்களே,
நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சி அடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 7; லூக் 1: 17 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகரவும், ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்யவும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-17
அக்காலத்தில்
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.