புனித பவுலீனு நோலா – ஆயர் (வி.நினைவு)
புனிதர்கள் ஆயர் ஜான் பிசர், தாமஸ் மூர் – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
பொதுக்காலம் 11ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
ஊதியம் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-11
சகோதரர் சகோதரிகளே,
என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.
உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப்பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப் பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டுவந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட ‘மாபெரும்’ திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன். நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால் அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவு படுத்தியே இருக்கிறோம்.
ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வு பெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா? நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம். நான் உங்களோடு இருந்த போது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன்.
கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள்மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
உரோ 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.