பொதுக்காலம் 9ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
என்னை அனுப்பினவரிடம் போகிறேன்; நீங்களோ கடவுளைப் போற்றுங்கள்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20
அந்நாள்களில்
திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, “மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு” என்றார்.
பின்னர் இரபேலை அழைத்து, “நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக” என்று கூறினார். அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள். “முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். “மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது” என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன். நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காதபோது, நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன். அதே போல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார். நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்.
இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றை எல்லாம் எழுதிவையுங்கள்” என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
தோபி 13: 2. 6. 7. 8 (பல்லவி: 2a)
பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகப் போட்டார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.