பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு)
பொதுக்காலம் 10ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
இயேசு கிறிஸ்து `ஆம்’ என உண்மையையே பேசுபவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22
சகோதரர் சகோதரிகளே,
நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 129-130. 131-132. 133,135 (பல்லவி: 135a)
பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.