சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர்
முதல் வாசகம்
மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25
சகோதரர் சகோதரிகளே,
சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?
கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.
யூதர்கள் அரும்அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.
ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை, ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16:15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 6
அல்லேலூயா, அல்லேலூயா! நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-27
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்.
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.