பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9
ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ‘ என்று பறைசாற்றுங்கள்.
இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
இரண்டாம் வாசகம்
மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
சகோதரர் சகோதரிகளே,
தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52
அக்காலத்தில்
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.