அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி – ஆயர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
விண்ணகமே நமக்குத் தாய்நாடு.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணிய வைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 12
அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.