புனித எட்விஜ் – துறவி (வி.நினைவு)
புனித மார்கரீத் மரியா அலக்கோக்கு – கன்னியர் (வி.நினைவு)
புனித எட்விஜ் – துறவி
முதல் வாசகம்
நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16
துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.
நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள். செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும் அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்; எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.
ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும். அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை; நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை. அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு! கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.
ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறு பெற்றோர்!
3உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். – பல்லவி
4ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.5ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில்
இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.